Thursday, 22 November 2012

சமையலறையில் ஆகலாம் அழகுராணி



பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.


நன்றி: தினமணி! 

No comments:

Post a Comment