Thursday, 22 November 2012

கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?



பெரும்பாலான, “பியூட்டி பார்லர்’களுக்குச் சென்றால், “உங்கள் முகத்தில், “பிளாக் ஹெட்’ அதிகமாக உள்ளது. நீக்கித் தரட்டுமா? “பேஷியல்’ செய்து கொள்ளுங்களேன்…’ என, தொல்லை செய்வர்.உங்கள் முகத்தில் இருப்பது, நிஜமாகவே கரும்புள்ளி தானா என்பது தெரியுமா உங்களுக்கு? மச்சத்தைக் கரும்புள்ளி என்று கூறி விட முடியுமா?
கரும்புள்ளி என்றால், முகத்தின் மேல் தோலில், நிறத்தைக் கொடுக்கும் நிறமி செல்கள் ஒரு இடத்தில் குவிந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தை தோல் தாங்கிக் கொள்ளும் வகையில், இந்த செல்கள் சில இடங்களில் குவிந்து விடும். வெயிலில் அதிகம் சுற்றும்போது, இது போன்று கரும்புள்ளிகள் ஏற்படும்.
ஆனால், மச்சங்கள் அப்படி அல்ல. உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், மச்சங்கள் தோன்றலாம். இதற்கு வெயிலைக் காரணம் கூற முடியாது. சில நிறமி செல்கள் ஒரே இடத்தில் தானாகவே குவிவதால், இது போன்று மச்சங்கள் ஏற்படுகின்றன. மச்சத்தில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் கருமை நிறத்தில் மச்சங்கள் தோன்றும். சிலருக்கு அடர் பிரவுன் நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் மச்சங்கள் தோன்றலாம். கரும்படலங்கள் அல்லது பிரவுன் நிற புள்ளிகள், வெயிலால் மட்டுமே ஏற்படுபவை. பரம்பரை காரணமும் இதற்கு உண்டு. முகத்திலும், கைகளிலும் இது தோன்றும்.
வெளிர் நிறத் தோலுடையவர்களிடம் இது அதிகம் காணப்படும். எனவே, “பார்லரில்’ உங்களிடம், அது, இது எனக் கூறி ஏமாற்றினால், ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை நீங்களே ஆராய்ந்து, சந்தேகம் இருந்தால், தோல் நோய் நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து, அவர் ஆலோசனை பேரிலேயே, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : தினமலர்

No comments:

Post a Comment